வணக்கம் மக்களே...
சில வாரங்களுக்கு முன்பு நடந்த பதிவர் சந்திப்பில் அண்ணன் ஜாக்கி சேகர் பதிவரல்லாத வாசக நண்பர் ஒருவரை அழைத்து வந்து “நாளொன்றுக்கு 20 மணிநேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பவர்” என்று அறிமுகம் செய்துவைத்தார். அன்றைய தினத்தில் பதிவர்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய அவர் அலெக்ஸா ரேட்டிங் பற்றி சில தகவல்களை கூறினார். அவற்றுடன் நான் அலெக்ஸா பற்றிய சில தகவல்களை வலையில் இருந்து திரட்டி உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.
என்ன...?
அலெக்ஸா என்பது உலகளவில் வலைத்தளங்களுக்கு தரவரிசை வெளியிடும் ஒரு நிறுவனம். அலேக்ஸாவின் தரவரிசை பெரும்பாலும் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. (இவர்களின் வரிசைபடுத்தல் நேர்மையானதா என்று பதிவின் பிற்பாதியில் பார்ப்போம்).
ஏன்...?
வலைஞர்கள் மத்தியில் அலெக்ஸா ரேங்க் என்பது அதிமுக்கியமாக கருதப்படுகிறது. அலெக்ஸா ரேங்க் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வந்துவிட்டால் தங்களது தளத்திற்கு தனி அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுகின்றனர்.
பெரும்பாலும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் அலெக்ஸா ரேங்கை வைத்தே தளங்களை மதிப்பிடுகின்றன. அதனால் உங்கள் தளங்கள் குறைவான அலெக்ஸா ரேங்க் வைத்திருந்தால் அதிக விளம்பர வருவாய் கிடைக்கும்.
மேலும் நல்ல அலெக்ஸா ரேங்க் கிடைத்தால் உங்கள் தளத்திற்கு அதிக ரீச் கிடைக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பெருகும். உங்கள் கருத்துக்கள் அதிக மக்களை போய்சேரும்.
எப்படி...?
பொதுவாக அலெக்ஸா ரேங்கை மூன்று முக்கியமான விஷயங்களை வைத்து கணக்கிடுகிறார்கள்.
- Page views per User
- Bounce Rate
- Time on Site
Page Views per User
உங்கள் தளத்திற்கு எத்தனை ஹிட்ஸ் கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. இதன் மீது சில தவறான புரிதல்கள் உள்ளன.
- உதாரணத்திற்கு உங்கள் தளத்திற்கு நாளொன்றுக்கு பத்து வாசகர்கள் வருகிறார்கள் ஆனால் அனைவருமே ஒரே இடுகையின் இணைப்பையே கிளிக் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவே, மற்றொரு தளத்திற்கு நாளொன்றுக்கு ஒரே ஒரு வாசகர்தான் வருகிறார் ஆனால் இருபது வெவ்வேறு இடுகையை கிளிக் செய்கிறார் என்றால் உங்களது தளத்திற்கு பத்து ஹிட்சும் மற்றொரு தளத்திற்கு இருபது ஹிட்சுமாக கணக்கிடப்படுகிறது. ஆக, உங்கள் தளத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கையை விட ஹிட்சின் எண்ணிக்கையே முக்கியம்.
- அதே சமயம், ஒரே இணைப்பை ஒரே வாசகர் பலமுறை கிளிக் செய்தால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. உதாரணமாக, உங்கள் தளத்தில் பத்து பக்கங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வாசகர் ஒருவர் பத்து பக்கங்களையும் பத்து பத்து முறை படித்தால் உங்களுக்கு நூறு ஹிட்ஸ் கிடைக்காது. பத்து ஹிட்ஸ் மட்டுமே கிடைக்கும்.
Bounce Rate & Time On Site
இரண்டிற்கும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் தான். வாசகர்கள் உங்கள் தளத்தை விட்டு வெளியேறுவதே Bounce Rate என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு வாசகர் உங்கள் தளத்திற்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள விளம்பரமோ அல்லது ஒலிக்கும் இசையோ பிடிக்காமல் உடனடியாக வெளியேறினால் அது உங்களது அலெக்ஸா ரேங்கை பாதிக்கும்.
மேலும், வாசகர் உங்கள் தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதே Time On Site. உங்களுடைய தளத்தில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு வாசகருக்கு மிகவும் பிடித்திருக்கும் பட்சத்தில் அவர் அதை ரசித்து முழுமையாக படித்தால் அது உங்கள் அலெக்ஸா ரேங்கை குறைக்க வழிவகை செய்யும்.
சில சர்ச்சைகள்
அலெக்ஸா ரேங்க் எனப்படுவது உங்கள் தளத்தின் உண்மையான ஹிட்சை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. உங்கள் தளத்திற்கு வருகை தரும் வாசகர் அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே ஹிட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- அதாவது, உங்கள் தளத்திற்கு நாளொன்றிற்கு ஆயிரம் வாசகர்கள் வருகை தருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அவர்களில் பத்து பேர் மட்டுமே அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துகிறார்கள். அதுவே, எனது தளத்திற்கு நாளொன்றிற்கு ஐம்பது வாசகர்கள் மட்டுமே வருகை தருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவருமே அலெக்ஸா டூல்பார் பயன்படுத்துபவர்கள் என்றால் எனது தளமே அலெக்ஸா ரேங்கில் முன்னிலை வகிக்கும்.
அலெக்ஸா ரேங்க் என்பது உங்கள் தளத்தின் கடைசி மூன்று மாத செயல்பாடுகளை வைத்தே கணக்கிடப்படுகிறது.
- அதாவது, நீங்கள் மூன்று மாதத்திற்கு முன்பு பெரிய அப்பாடாக்கராக இருந்துவிட்டு இப்போது பதிவெழுதுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தால் உங்கள் தளத்திற்கு மோசமான அலெக்ஸா ரேங்க் தான் கிடைக்கும்.
மாற்று
அலெக்ஸா ரேங்கை தவிர்த்து வேறு வகைகளில் உங்கள் தளத்தை மதிப்பிட முடியும் என்றால் கூகிள் பேஜ் ரேங்கை குறிப்பிடலாம். இது பெயரில் மட்டுமே ரேங்க் மற்றபடி இது ஒரு மார்க். உங்கள் தளம் பத்துக்கு எத்தனை மதிப்பெண்களுக்கு எத்தனை மதிப்பெண் வாங்கியிருக்கிறது என்பதே இதன் கணக்கு. மேலும் இது அலெக்ஸாவை போல தினமும் ரேங்க் வெளியிடுவது அல்ல. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் ரேங்க் வெளியிடப்படும்.
இந்த பதிவு புரியும்படியும் பயனுள்ளதாகவும் இருந்ததா என்பது பற்றியும், அலெக்ஸா ரேங்க் பற்றிய உங்களது கருத்து என்ன என்பது பற்றியும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.



